சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்புப் பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிக்கப்படக்கூடிய இடங்களான ஐஸ்ஹவுஸ், நுங்கம்பாக்கம், சூளைமேடு, ஐசிஎஃப் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
பின்னர் லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணும் வளாகப் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் இதுவரை ரூ. 6.85 கோடி பணமும், ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கமும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 751 ரவுடிகள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற துப்பாக்கிகள் சென்னையில் இரண்டாயிரத்து 767 உள்ளன. அவற்றில் இதுவரை ஆயிரத்து 796 துப்பாக்கிகள் தேர்தலையொட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளன. 967 துப்பாக்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை.
இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் சென்னைக்கு வந்துள்ளனர். 46 இடங்களில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. 307 இடங்களில் ஆயிரத்து 216 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
10 இடங்களில் 30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தி கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்ளோம்.
பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரவுடிகள் பட்டியலை எடுத்து காவல் நிலையத்திற்கு வரவைத்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எச்சரித்து அனுப்பியுள்ளோம்.
மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல் துறை கண்காணிக்க உள்ளனர். கட்டுப்பாட்டு அறை அமைத்தும் கண்காணிக்க உள்ளோம்.
மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மாநகராட்சி அலுவலர்கள் உதவியோடு கண்காணிக்க காவல் துறை திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.