சென்னை, அன்னனூரில் உள்ள சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருடன் சமீபத்தில் அறிமுகமான நபர்கள் சிலர், ரயில்வேத் துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 12 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளனர்.
பின்னர் அவருக்கு போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதுதொடர்பாக புருஷோத்தமன் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போலியான பணி நியமன ஆணையைக் கொடுத்து ஏமாற்றிய அம்பத்தூரைச் சேர்ந்த பௌலின்மேரி (எ) ஜெயசீலி (47), கொளத்தூரைச் சேர்ந்த டில்லிபாபு (47), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரித்விராஜ் (36), மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (38), கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த ஸ்ரீஜா (46), சுரேந்திரன் (59), திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கனவாபீர் (39) ஆகிய ஏழு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து போலி பணி நியமன ஆணைகள், கணினியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் பேருந்தில் மடிக்கணினி திருட்டு - காணொலி வைரல்