சென்னை : கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மூலம் கோயம்பேட்டில் உள்ள இந்தியன் வங்கிக் கிளையில் 500 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டது.
இது நடந்து மூன்று நாள்களுக்குப் பின் கணேஷ் நடராஜன் என்பவர், இந்தியன் வங்கி கோயம்பேடு கிளையில் துறைமுக பொறுப்புக் கழகத்தின் துணை இயக்குநர் எனக் கூறி, நிரந்தர வைப்புக் கணக்கில் உள்ள பணத்தில் 100 கோடி ரூபாயை இரு வேறு நடப்புக் கணக்குகளில் 50 கோடி ரூபாய் வீதம் மாற்றக்கோரி சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் பரிந்துரைக் கடிதம், அனுமதிச் சான்று ஆகியவற்றை போலியாக தயார் செய்து அளித்தார்.
பின்னர், துறைமுக பொறுப்புக் கழகத்தின் பெயரில் இரு நடப்புக் கணக்குகளை இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜாவின் உதவியுடன் தொடங்கிய கணேஷ் நடராஜன், தரகரான மணிமொழியுடன் சேர்ந்து ஒரு நடப்புக் கணக்கில் மாற்றப்பட்ட 50 கோடி ரூபாயை வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் தொடர்ந்து மாற்றி வந்துள்ளார்.
மூன்று பேர் தலைமறைவு
இந்தத் தொடர் நடவடிக்கைகளால் சந்தேகமடைந்த துறைமுக அலுவலர்கள், இந்தியன் வங்கி அலுவலர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
அப்போது மீண்டும் செல்வகுமார் என்பவருடன் பணத்தை மாற்ற வந்த மணிமொழியை கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இவ்வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கணேஷ் நடராஜன், மணிமொழி, சேர்மதி ராஜா ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகினர்.
இந்த விவகாரத்தில் துறைமுக பொறுப்புக் கழகமும், இந்தியன் வங்கியும் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் ஆறுமுகம் என்பவர் இச்சம்பவம் தொடர்பாக சிபிஐயில் புகார் அளித்தார்.
அவர் அளித்தப் புகாரின் பேரில் இந்தியன் வங்கி மேலாளர் சேர்மதி ராஜா, துறைமுக அலுவலர் போல் மோசடி செய்த கணேஷ் நடராஜன், தரகர் மணிமொழி ஆகிய மூன்று பேர் மீதும் சிபிஐ கடந்த ஆகஸ்டு 7ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
சிபிஐ தொடர்ந்து விசாரணை
விசாரணையில் 100 கோடி ரூபாயில் 45 கோடி ரூபாய் வரை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மணிமொழி, கணேஷ் நடராஜன் மூலம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் இந்தியன் வங்கி, துறைமுக பொறுப்புக் கழகத்தில் உள்ள யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஒருவர் கைது
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தரகர் மணிமொழி வீடு, வங்கி மேலாளர் சேர்மதி ராஜா ஆகியோர் தொடர்புடைய மூன்று இடங்களில் சிபிஐ அலுவலர்கள் 10-க்கும் மேற்பட்டோர் அதிரடி சோதனை மேற்கொண்டு ஆவணங்களைக் கைப்பற்றினர். பின்னர் தரகர் மணிமொழியை சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: 15 நாட்களில் குடும்ப அட்டை - அமைச்சர் சக்கரபாணி