சென்னை: பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் முதன்மை பொறியாளராக பணியாற்றிவந்தவர் காத்பால். இவர் தனது பதவியிலிருந்து கடந்த மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு டெண்டர் பெற்று தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2019ஆம் ஆண்டு முதல் பதவி ஓய்வு பெறும் வரை 5 கோடிய 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் காத்பால் மீதும், அதில் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் இயக்குநர் உள்பட நான்கு பேர் மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மொத்த லஞ்சத்தின் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னையை சார்ந்த தனியார் நிறுவன இயக்குனரின் டெல்லியில் இருக்கும் பங்குதாரர் மூலம் அங்குள்ள காத்பாலின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டதும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
2.75 கோடி ரூபாய் பறிமுதல்:
காத்பாலிடமிருந்து சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 23 கிலோ தங்கம் உள்ளிட்டவற்றையும் சிபிஐ அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். டெல்லி, சென்னையிலுள்ள காத்பாலுக்கு சொந்தமான ஒன்பது இடங்களில் சிபிஐ அலுவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
"வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் சொந்த நாட்டிலேயே ரயில் தயாரிக்கும் திட்டத்தை ரயில்'18 என்ற பெயரில் வடிவமைக்கும் பொறுப்பு சென்னை ஐ.சி எஃப்-க்கு வழங்கப்பட்டு ரயில்வே வாரியத்தால் திட்டம் தொடர்பான வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை ஐ.சி.எஃப்பிடம் இருந்து கோரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிணையில் விட லஞ்சம்: ஆய்வாளர் உட்பட 2 பேர் ஆயுத படைக்கு மாற்றம்!