சென்னை: வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின்படி வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகவோ, தொழில் ரீதியிலாகவோ இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்படும் பணத்தொகை அனைத்தும் வங்கி பரிவர்த்தனை மூலமாகவே நடைபெற வேண்டும்.
அதேபோல வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட பணத்தின் மூலம் செய்யப்படும் செலவுகள் அனைத்தும் வங்கி பரிவர்த்தனை மூலமே நடைபெற வேண்டும். இந்நிலையில் இந்த சட்ட விதிகளை மீறி நேரடியாக வெளிநாடுகளிலிருந்து ஹவாலா முறையில் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ-க்கு தகவல் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் நாடு முழுவதும் 40 இடங்களில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தரகர்கள் மற்றும் சில மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஊழியர்களையும் குறிவைத்து அதிரடி சோதனையைத் தொடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக டெல்லி, சென்னை, ஜெய்பூர், கோவை உள்ளிட்ட 40 இடங்களில் ஹவாலா பணப் பரிவர்த்தனையில் தொடர்புடையவர்களைக் குறிவைத்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் சிக்கியுள்ளதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.