சென்னை: வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, அந்தந்த வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றிருந்த நிலையில், நேற்று வேளச்சேரியில் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் அடங்கிய நான்கு பெட்டிகளை எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியது.
இதனைக் கண்ட மக்கள், அவர்களை சிறைப்பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை எழுப்பவே, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்ற விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன், வழக்கறிஞர் நவாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் சூரிய பிரகாசம் ஆகியோர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய சூரிய பிரகாசம், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றது குறித்து உடனடியாக ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் பணி இடமாற்றம் செய்ய வேண்டும். தவறு நடந்திருப்பாக சத்யபிரத சாகு உறுதி செய்தார். வாகனத்தில் கொண்டு சென்றது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. முதல் கட்டமாக மூன்று பேரை பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்தார்.
வேளச்சேரி தொகுதி மட்டுமன்றி பல்வேறு பகுதியில் இதுபோன்ற தவறுகள் நடைபெற்று இருக்கலாம் எனத் தெரிகிறது. அதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்பட வில்லை எனில் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்" என்றார்.