சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்நிலையில் அவரின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசா ஊழல் வழக்கில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் எஸ்.பாஸ்கர் ராமனை சிபிஐ நேற்று இரவு விசாரணைக்கு பின் கைது செய்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனர்களுக்கு விசா நீட்டிப்பு செய்ய 50 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சென்னையில் சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக, கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான சென்னை, மும்பை, ஒடிசா, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (மே.17) காலை முதல் இரவு வரை சோதனையிட்டனர். இதேபோல் பாஸ்கர ராமன் வீடு மற்றும் அலுவலகத்திலும் நேற்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா நீட்டிப்பு செய்வதற்கு 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக புதிய வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.