சென்னை: தமிழ்நாட்டில் குட்கா புகையிலைப்பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பனை செய்ய தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், மத்திய அரசு அதிகாரிகள் பழனி, செந்தில் வேலவன் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி சிபிஐ, மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்தது.
பின்னர் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை.
முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு (2022) ஜூலை 19-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் (2022) மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் தொடர்பான குறித்த விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், கூடுதல் குற்றப்பத்திரிகையில் உள்ள தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகை சிபிஐக்கு திரும்ப அளித்தது.
இதனிடையே குட்கா பொருள்கள் வைத்திருந்ததாக தன்னுடைய குடோனுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், வாடகைக்கு விட்ட குடோன் சீல் வைக்கப்பட்டுள்ளாதல் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் எந்த சம்மந்தமும் இல்லாத நிலையில் என்னுடைய குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிட அதன் உரிமையாளர் சுமந்த் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அனைத்து மனுக்களும் சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை, மேலும் மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கபட்டது. இதனால் குடோனுக்கு வைத்த சீலை அகற்ற சிபிஐக்கு உத்தரவிடக்கோரிய சுமந்த் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, வழக்கின் விசாரணையினை மே 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.