சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருபவர் சங்கர சுப்பிரமணியன். இந்தியன் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான இவர், சொந்தமாக தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக எம்.ஜி.ஆர் நகரில் உள்ள இந்தியன் வங்கியில், தனது வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து, சுமார் எட்டு லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சங்கர சுப்பிரமணியன் தான் கடனாக வாங்கிய தொகையை வட்டியுடன் செலுத்தி முடித்துள்ளார். பின்னர் நீண்ட நாட்களாக தனக்குச் சொந்தமான பத்திரத்தை வாங்காமல் கடந்த ஆண்டு சங்கர சுப்பிரமணியன் அதே வங்கியில் அடமான கடன் வாங்குவதற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வங்கியின் மேலாளராக இருந்த ரவீந்தரன் சாமுவேல் என்பவர், லோன் தருவதாகக் கூறி அனைத்து விதமான ஆவணங்களையும் தயார் செய்ய சொல்லிவிட்டு, பின்னர் 62 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு லோன் வழங்க முடியாது என்று கூறி மறுத்ததாகத் தெரிகிறது.
இதனால் தான் முன்னரே சமர்ப்பித்திருந்த ஆவணங்களைத் திருப்பித்தரும்படி ரவீந்தரனிடம் சங்கர சுப்ரமணியன் கேட்டுள்ளார். அப்போது, பத்திரத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்றால் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று ரவீந்திரன் கூறியுள்ளார். இதற்கிடையில், கெல்லிஸில் உள்ள இந்தியன் வங்கிக்கு ரவீந்தரன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது அவரிடம் பத்திரத்தை கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என்று கேட்டதற்கு, 7,500 ரூபாயை வீட்டில் வந்து கொடுக்குமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனால் உடனடியாக சங்கர சுப்பிரமணியன், ரவீந்தரன் லஞ்சம் கேட்ட ஆடியோ மற்றும் வீடியோவை சிபிஐ அதிகாரிகளுக்கு அனுப்பி புகார் அளித்தார்.
அதனடிப்படையில், சிபிஐ போலீசார் சங்கர சுப்பிரமணியனிடம் 7,500 ரூபாய் பணத்தை ரவீந்தரனிடம் லஞ்சமாகக் கொடுக்கக் கூறியுள்ளனர். பணத்தை ரவீந்தரன் வாங்கும் போது மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், கையும் களவுமாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், லோன் வாங்க வரும் பலரிடம் இருந்து ரவீந்திரன் லஞ்சம் பெற்று வந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.