கோவை மாவட்டம்,பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை ஏமாற்றி வாலிபர்கள் சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நக்கீரன் இணையதளத்தில் நக்கீரன் கோபால் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.
பின்பு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இதில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் நக்கீரன் கோபால் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகி இணையதளத்தில் வெளியிட்ட வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.
இதனை தொடர்ந்து நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , 'சென்னையில் இருக்கும் பத்திரிகை ஆசிரியரை கோவைக்கு அழைப்பதன் காரணம் என்ன? உண்மையிலேயே விசாரணை ஆவணங்கள் தேவைப்படும் பட்சத்தில் சென்னையிலேயே விசாரித்திருக்கலாமே?' என்று கூறி சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 1ஆம் தேதி அன்று அவரை விசாரிக்கலாம் என்று தீர்ப்பு அளித்தனர். அதன் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.