சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலை கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக ஆட்டோவில் வந்த பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள் தலைமையிலான காவல் குழுவினர் கைது செய்து முதலில் அயனாவரம் காவல் நிலையத்திற்கும், பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி காலை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதியான விக்னேஷ் வாந்தி மற்றும் வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் தாக்கியதே விக்னேஷின் மரணத்துக்குக் காரணம் என குடும்பத்தார் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமைச் செயலக காலனி காவல் நிலைய காவலர் பவுன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்தும், இவ்வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றியும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். பின்னர் வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி சரவணன் நியமிக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்டமாகச் சம்பவம் நடந்த இடமான தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அங்கு ஆய்வு நடத்தி வழக்கிற்கு தேவையான ஆவணங்களை கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்த சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் பிரபுவுக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீசார், அவரிடம் கடந்த 4ஆம் தேதி விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அதேபோல தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமாரும் வழக்கு ஆவணங்களுடன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து வெளியான விக்னேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், விக்னேஷ் உடலில் தாக்கப்பட்ட 13 காயங்கள் இருந்ததாகவும், குறிப்பாக அவரது தலையில் 1 செ.மீ அளவில் துளை போன்ற காயம் இருந்ததாகவும், இடது காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விக்னேஷ் சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் (மே.5) தலைமை செயலக காலனி காவல் நிலையம் சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்ட காவல் துறையினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய காவல் துறையினரான தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படை வீரர் தீபக், உதவி ஆய்வாளர் கணபதி, நிலைய எழுத்தர் முனாஃப், வாகன ஓட்டுநர் கார்த்திக், தலைமை காவலர் குமார், மகளிர் காவலர் ஆனந்தி ஆகிய 9 பேருக்கு சிபிசிஐடி போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டு நேற்று (மே.6) காலை சுமார் 11 மணி முதல் தொடர்ந்து 12 மணி நேரமாக அவர்களிடம் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் விக்னேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 5 காவல் துறையினரைக் கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு டிஜிபி-க்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 9 காவல் துறையினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முதற்கட்டமாக எழுத்தர் முனாஃப் மற்றும் காவலர் பவுன்ராஜ் ஆகிய இரண்டு பேரை விக்னேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்து சிபிசிஐடி போலீசார் அவர்களைக் கைது செய்துள்ளனர்.
குறிப்பாக வாகன சோதனையின் போது விக்னேஷை காவலர் பவுன்ராஜ் தாக்கியதும், பின்னர் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து முனாப் தாக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கைது நடவடிக்கை தொடர வாய்ப்பிருப்பதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளனர்.
இதையும் படிங்க: விக்னேஷ் கொலை வழக்கு - யார் முதல் குற்றவாளி? தீவிர விசாரணை