சென்னை: சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது 7 போக்சோ வழக்குகள் மற்றும் ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் முதல் வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகிய இரு நீதிமன்றங்களையும் அனுகி அவருக்கு எதிராக உள்ள எட்டு வழக்குகளிலும் ஜாமீன் பெற்றார்.
இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சிபிசிஐடி போலீசாரால் பதியப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காகச் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சிவசங்கர் பாபா நேரடியாக ஆஜரானார். இந்தநிலையில் சிவசங்கர் பாபா மீது இரண்டாவதாகப் பதியப்பட்ட போக்சோ வழக்கில், 7 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தயார் செய்துள்ளனர்.
ஏற்கனவே சிவசங்கர் பாபா மீது எட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சுஷில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 4 பேரிடம் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். இதில், 4 மாணவிகளும் பாதிக்கப்பட்டவர்கள் என சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது.