சென்னை: ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி சர்கிள், ஜங்கிலி ரம்மி, டிரீம் 11 போன்றவற்றில் தங்கள் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கான தடைச் சட்டம் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கருமாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான அருண் குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மன உளைச்சலில் கடந்த 22ஆம் தேதி வீட்டைவிட்டு மாயமான நிலையில், கடந்த 26ஆம் தேதி ஊர் கிணற்றிலிருந்து அவரது சடலமாக மீட்கப்பட்டது.
50 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த விரக்தியில் அருண் குமார் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தற்கொலைச் சம்பவம் உள்பட தமிழகத்தைப் பொறுத்தவரைக் கடந்த 16 மாதங்களில் 39 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததன் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்.
சென்னையைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்ததாகப் பதிவான 17 வழக்குகள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்களால் கடந்த சில மாதங்களுக்கு முன் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களால் விளையாடப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் நிறுவனங்களுக்கு உரிய விளக்கம் கேட்டு சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குறிப்பாக ரம்மி சர்கிள், ஜங்கிலி ரம்மி, லூடோ, ரம்மி கல்சர், டிரீம் 11 உள்பட 6 ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு அவர்களின் விளையாட்டு நடைமுறைகள் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போக்சோவில் 10 ஆண்டுகள் சிறை - ஷாக்கில் அரளி விதையை தின்ற இளைஞர்