சென்னை: சென்னையில் ஒன்பது வயது சிறுமி மாடு முட்டி தாக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கால்நடைகள் தெருக்களில் சுற்றித் திரிவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி மாடு முட்டி படுகாயமடைந்த செய்தியை பார்க்கும்போது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்து சிறுமி பூரண குணமடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நாய்கள் மற்றும் மாடுகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாய்களின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் தெருக்களில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி சிலர் நாய்க்கடிக்கு ஆளாகி சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய துர்பாக்கிய நிலையும் இங்கு உள்ளது என்றார்.
இதையும் படிங்க: கோபியில் தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து:3 பயணிகள் காயம்!
இந்நிலையில் இரவு நேரங்களில் நடந்து செல்வது என்பது அபாயகரமான செயலாக கருதப்படுகிறது. பெரும்பாலான தெருக்களில் மாடுகள் மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளை கவிழ்த்து அதில் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு சுகாதாரமற்ற சூழ்நிலையாகவும் மாறிவிடுகிறது. கால்நடைகளால் மனித இனத்திற்கு ஆபத்து ஏற்படுமேயானால் கால்நடைகளை முறைப்படுத்தவும், தெருக்களில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பது அரசின் தலையாய கடமையாகும்.
கிராமப் புறங்களில் மாடுகள் மேய்ப்பதற்கு போதுமான இட வசதிகள் உள்ளன. ஆனால் நகர்ப்புறங்களில் குறிப்பாக சென்னை மாநகரத்தில் போதுமான இட வசதி இல்லை என்ற நிலையில் நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். மேலும் மாடுகள் மேய்ப்பதற்கு இடவசதி இல்லாமல் தெருக்களை மட்டுமே நம்பி மாடுகளை வளர்ப்போரை கண்டறிந்து அவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி மாடுகள் தெருக்களில் சுற்றித் திரிவதைத் தடுக்க நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மாடுகள் மற்றும் நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவில்லையெனில் படுகாயமடைவதும், உயிரிழப்பும் தொடர்ந்து நடைபெறும். எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு தெருக்களில் மாடுகள் மற்றும் நாய்கள் நடமாட்டத்தை முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான உறுப்பு வன்முறை கொடுமையானது - மணிப்பூர் கமிட்டியின் அறிக்கையை தாக்கல் செய்ய 2 மாத கால அவகாசம்!