சென்னை: கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலமாகத் தேர்வானது நடத்தப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில், கரோனா பரவலின் தாக்கம் குறைந்துவருவதால் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதனால் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடத்த அரசு திட்டமிட்டது. இந்நிலையில், நேரடித் தேர்வுகள் நடத்தக்கூடாது எனவும், ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் கல்லூரி மாணவர்கள் பல மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் நலன் கருதி வழக்குகள் ரத்து
அப்போது அத்துமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் மீது மதுரையில் ஒன்பது வழக்குகளும், கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 12 வழக்குகள் காவல் துறையினரால் பதிவுசெய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான விசாரணையை காவல் துறையினர் மேற்கொண்டுவந்தனர். இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து வழக்குகளையும் கைவிட காவல் துறைக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் மாணவர்களின் மீது பதியப்பட்ட 12 வழக்குகளையும் காவல் துறையினர் கைவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பதக்கங்களைக் குவிக்கும் தலைமைக் காவலர் ராமு - பாராட்டிய மத்திய மண்டல ஐஜி