சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு மேலே இன்று மதியம் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இது தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து உயர் நீதிமன்றத்தைச்சுற்றி போலீசார் சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் ஆளில்லா விமானத்தைப் பறக்கவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தபொழுது, அந்த இளைஞர் கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த சார்லஸ் என்பதும், தனது உறவினர் திருமணத்திற்காக பெரம்பூருக்கு டிரோன் கேமராவை எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்து சென்னையில் உள்ள முக்கிய இடங்களை படம் பிடிக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது டிரோன் கேமராவில் உள்ள காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரிசர்வ் வங்கி, உயர் நீதிமன்றம், தலைமைச்செயலகத்தில் ஒரு பகுதி என தடை செய்யப்பட்ட இடங்களின் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு டிரோன் கேமரா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் தலைமைச்செயலகம், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், முக்கியப்பிரமுகர்களின் குடியிருப்புகள், தூதரகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் துறை அலுவலகங்கள், மத்திய, மாநில முக்கிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், சிறைச்சாலைகள், அரசு தொலைக்காட்சி நிறுவனம், பொதுமக்கள் அதிகளவில் கூடும் வழிபாட்டுத்தலங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் காடுகள் போன்ற இடங்களில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ஐஏவுக்கு தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கும்: டிஜிபி சைலேந்திர பாபு