சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதன்படி சென்னை வில்லிவாக்கம் ஸ்ரீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கியம்மன் கோயில் நிதியில் இருந்து 16.30 கோடி ரூபாயும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து 13.50 கோடி ரூபாயும், பழனி தண்டாயுதபாணி கோயிலில் இருந்து 15.20 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்தி சென்னை, திருநெல்வேலி மற்றும் பழனியில் முதியோர் இல்லங்கள் தொடங்குவது தொடர்பாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அறநிலையத்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று (அக் 28) உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “சட்டப்படி கோயில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும், அறங்காவலர்கள் மூலமாக பொதுமக்கள் ஆட்சேபங்களைப் பெற்று முடிவெடுக்க வேண்டும். மூன்று கோயில்களில், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க உள்ளனர் என தெரியவில்லை” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பல காரணங்களால் பல கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அவர்களுக்கு பதிலாக தக்கார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அதிகாரம் குறித்து தலைமை நீதிபதி அமர்வும், கோயில் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
உள்ளூர் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட உள்ளன. கோயில்களின் உபரி நிதிதான் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதேபோல் கோயில் நகைகளை உருக்குவதை எதிர்த்தும், கோயில் நிதியில் கல்லூரி தொடங்குவதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசும், கோயில்களுக்கு நிதி ஒதுக்குகின்றன. ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், 130 கோடி ரூபாய் சமீபத்தில் ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து, “பழனி தண்டாயுதபாணி கோயில் அறங்காவலர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி மனுதாரருக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு மனு அளிக்க இரு தரப்புக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இவ்வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கோயிலில் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்