சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனால் அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 8) பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தார். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் கருப்பு கொடி காட்ட வேண்டும் என்றும், கருப்பு பலூன்களை பறக்க விட வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார்.
இதனால் நேற்றைய முன்தினம் முதல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். மேலும் பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் எழுதப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கருப்பு பலூன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி சென்னை வந்திருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
அதேநேரம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் மோடிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தும் போராட்டம் நடத்தினர். இதில் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, காங்கிரஸ் கட்சி மேலிடை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் அவர்கள் கருப்பு உடைகள் அணிந்தும், கருப்புக் கொடி ஏந்தியும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்றைய தினம் முறையாக அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியது தெரிய வந்ததன் அடிப்படையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட 600 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய முனையம் திறப்பு, சென்னை முதல் கோயம்புத்தூர் வரையிலான வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைப்பு, சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்பு, பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு மைசூரு சென்றார்.
தொடர்ந்து இன்று (ஏப்ரல் 9) காலை கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தை பார்வையிடுதல், தமிழ்நாட்டின் முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் பார்வையிடல், ஆஸ்கர் வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் இடம் பெற்றிருந்த யானை பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதிகளை சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அட்வென்சரஸ் பயணம்.. முதுமலையில் ஆஸ்கர் தம்பதியுடன் உரையாடல்!