சென்னை: புழல் விநாயகபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் இருசக்கர வாகனத்தைப் போதையில் ஓட்டி சென்ற போது கீழே தவறி விழுந்துள்ளார். இதையடுத்து காயங்களுடன் அந்த பெண் சென்னை பெரம்பூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
பின்னர் மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த போது தன்னால் வரிசையில் நிற்க முடியாது என மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பெண் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது அவர்களின் தலைமுடியைப் பிடித்துத் தாக்கி, போதையிலிருந்த பெண் சண்டை போட்டுள்ளார். மேலும் ஆபாச வார்த்தைகளைப் பேசி ரகளையில் ஈடுபட்டு உள்ளார்.
இதையடுத்து பெண் போலீசார் ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் அவர்களும் அங்குச் சென்று அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் செல்ல முற்பட்ட போது, அந்த பெண் மறுப்பு தெரிவித்து மீண்டும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து ஒரு கட்டத்தில் தான் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், தனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து நேற்று மீண்டும் அவரது வீட்டிற்குச் சென்ற செம்பியம் போலீசார், அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். பின்னர் அவர் மீது பணி செய்யாமல் தடுத்தல், போலீசாரை தாக்க முயன்றது, ஆபாசமான பேச்சு போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இவர் புழல் பகுதியில் ஒரு கடையில் இதே போல் போதையில் தகராறு செய்ததாகவும், ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது மேலும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சீட்டு முடிந்ததும் பூட்டு போட்ட பிரபல நகை கடை;சென்னையில் நகை சீட்டு கட்டியவர்கள் போலீசில் புகார்