சென்னை: தமிழ்நாடு கோயில்களில் உள்ள நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, அதனை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு செப்டம்பர் 22ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் அஸ்வத்தாமன் எனபவரால், இன்று (அக்.7) சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மத உணர்வை புண்படுத்தும் வகையிலான உத்தரவு
அதில், ”இந்து சமய அறநிலைய சட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நகைகளை உருக்க எந்த அனுமதியும் வழங்கவில்லை. அறநிலையத் துறை, கோயில் நிர்வாகத்தில் மட்டுமே தலையிட முடியுமே தவிர, மத வழிபாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது.
வருவாய் ஈட்டுவதற்காக நகைகளை உருக்கி டெபாசிட் செய்வதற்கு பதிலாக, ஆக்கிரமிப்பில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு வருவாய் ஈட்டலாம். கோயில் நகைகள் தொடர்பாக முறையாக எந்த பதிவேடுகளும் பராமரிக்கப்படாத நிலையில், நகைகளை உருக்கி வங்கிகளில் டெபாசிட் செய்வது கேள்வியை எழுப்பியுள்ளது.
பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகளை உருக்க அலுவலர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த உத்தரவு இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால், நகைகளை உருக்குவது தொடர்பான சுற்றறிக்கைக்கு தடை விதிப்பதுடன், அதனை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அணுக்கழிவு விவகாரம்: பிரமருக்கு டி.ஆர். பாலு கேள்வி!