சென்னை: சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவராகப் பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, மன்றக் கூட்டத்தை கூட்டுவதற்கு அனுமதியளித்து வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, மொத்த உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்குக்கு குறையாத எண்ணிக்கையில் கையெழுத்திட்டிருக்க வேண்டும் எனவும், மூன்று உறுப்பினர்கள் மட்டுமே கையெழுத்திட்டுள்ள இந்த தீர்மானம் சட்டப்படி செல்லாது எனவும் கூறியிருந்தார்.
இதை ஏற்ற உயர் நீதிமன்றம், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற, மன்றக் கூட்டத்தை கூட்ட அனுமதியளித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜெகநாதனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எட்டு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, கடந்த நவம்பர் 15ஆம் தேதி மனு அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மன்றக் கூட்டத்தை கூட்ட அனுமதியளித்ததாகவும் கூறி, அரசுத்தரப்பில் தடையை நீக்கக்கோரி ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், கடந்த நவம்பர் 15ஆம் தேதி எட்டு உறுப்பினர்கள் அளித்த தீர்மானத்தின் அடிப்படையில் ஏழு நாட்களில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், அதற்கு மனுதாரர் பதிலளித்தாலும், இல்லாவிட்டாலும், தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள எந்தத் தடையும் இல்லை என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: Road Accident near poonamallee: பூந்தமல்லி அருகே அக்கா கண் எதிரே தம்பி இறந்த சோகம்