சமீபத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகள் மீது காவிச்சாயம் பூசி அவமதிக்கப்பட்ட சம்பவங்களைக் கண்டித்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். அப்போது, காவிச் சாயம் பூசி களங்கத்தை ஏற்படுத்துவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தன்னுடைய யூ-ட்யூப் வீடியோ தளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”காவியை களங்கம் எனக் குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர், காவி நிறம் உள்ளதால் களங்கமான தேசியக் கொடியைதான் வரும் ஆகஸ்டு 15ஆம் தேதி ஏற்றப் போகிறாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
”தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளையும் பச்சையும் மட்டும், அதாவது இந்து மதத்தினரை தவிர்த்துவிட்டு, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் மட்டும் இருந்தால் போதுமானது என்ற முடிவுக்கு முதலமைச்சர் வரத் தயாரா” என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அவர் அக்காணொலியில் பேசி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் ஆன்லைன் மூலம் கடந்த 11ஆம் தேதி சென்னை சைபர் கிரைம் பிரிவில் எஸ்.வி சேகர் மீது புகாரளித்துள்ளார்.
அந்நபர் தனது புகாரில், எஸ்.வி.சேகர் மீது தேசியக் கொடியை அவமதித்ததாகவும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி பொது மக்களிடையே கலக்கத்தை தூண்டுவதாகவும், எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், தேசியக் கொடியை அவமதித்ததற்காக, பிரிவு 2, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் பாஜக நிர்வாகியும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இஐஏ 2020 வரைவின் தமிழ் மொழியாக்கம் தயாராக உள்ளது - மத்திய அரசு தகவல்!