சென்னை: பழையவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர், தமிமுன் அன்சாரி. இவர், திமுகவில் சமீபத்தில் சிறுபான்மை அணியின் வடசென்னை மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ஆதரவாக சிறுபான்மை அணியினர் முதலமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் புகைப்படங்களுடன் கூடிய பேனரை காமாட்சி அம்மன் கோவில் அருகே வைப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அப்போது, அங்கு சென்ற திமுக பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன், தமிமுன் அன்சாரியிடம் தகாத வார்த்தையில் பேசி இஸ்லாமியர்களை அவதூறாகப் பேசியுள்ளார். மேலும், அங்கு பேனர்களை வைக்கக்கூடாது எனவும்; பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். மேலும், ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரையும் தகாத வார்த்தைகளில் திட்டியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிமுன் அன்சாரி, ராயபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். தன்னை அவதூறாக பேசியதோடு, இஸ்லாமியர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளிடம் தரக்குறைவாகப் பேசி வருகிறார். இதனைக் கண்டித்து நாளை வண்ணாரப்பேட்டை வியாபாரிகள் சங்கம் சார்பாக போராட்டம் நடத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், 51ஆவது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மற்றும் ஆறு பேர் மீது ராயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294 பி ஆபாசமாகப் பேசுதல், 506 (1) மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் ராயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெகதீசன் கடந்த டிசம்பர் மாதம் வண்ணாரப்பேட்டையில் சாலையோரம் வியாபாரம் செய்யும் பெண்ணிடம் மாமூல் கேட்டு மிரட்டியதுடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாலும், மதுபோதையில் காவல் துறையினரை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாக்யராஜ் மகனாக நடிக்க வைப்பதாக கூறி மோசடி - சினிமா விநியோகஸ்தரை கடத்திய கும்பல்!