சென்னை: சென்னையில் வியாசர்பாடி ஏ.ஏ. சாலையில், வியாசர்பாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் இருந்ததால் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த பிரகாஷ், தினகரன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் பிரீத் அனலைசர் கருவியால் சோதனை செய்து, பின்னர் பெரம்பூர் ரயில்வே சந்திப்பு அருகே இருந்த போக்குவரத்து போலீசாரிடம் அழைத்துச் சென்றனர். இதனிடையே பிரகாஷ் அவரது நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில், அவரது நண்பர்களான வழக்கறிஞர்கள் மணிக்குமார், லோகேஸ்வரன் மற்றும் ஒருவர் என மூன்று பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
போலீசாரை பின் தொடர்ந்த மூவரும், பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே போலீசாரை வழிமறித்து, பிரகாஷை மீட்டு, பொதுமக்கள் முன்னிலையில் போலீசாரை தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், அரைகுறை ஆடையுடன் தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும், தங்கள் மீது எப்படி கை வைப்பார்கள் என்றும், போலீசாரை தாக்கும் தொனியில் மிரட்டியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக கூடுதலாக போலீசார் அங்கு வந்தனர். பிறகு பிரகாஷ், தினகரனை பிடித்து மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்து, அவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ஆபாசமாகப் பேசி மிரட்டியதாக வியாசர்பாடி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் சிவக்குமார் செம்பியம் காவல்நிலையத்தில் கொடுத்தப் புகாரின் பேரில், இரண்டு வழக்கறிஞர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வீட்டில் இருந்தவருக்கு ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக அபராதம்?
இது இவ்வாறு இருக்க சென்னையில் வீட்டில் இருந்தவருக்கு ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் செலுத்துமாறு ரசீது அனுப்பியதாக சங்கர் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். சங்கர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை போக்குவரத்து காவல்துறையின் மூலம் தனக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு ரசீது வந்திருப்பதாகவும், ஆனால் தான் அந்த நேரத்தில் வீட்டில் இருந்ததாகவும் பதிவிட்டுள்ளார். அதில் ரசீதையும் வெளியிட்டு, ட்விட்டர் பதிவில் சென்னை காவல்துறையையும் டேக் செய்துள்ளார்.
இந்தப் பதிவு வைரலான நிலையில், போக்குவரத்து போலீசார், இதற்கு விளக்கமளித்துள்ளனர். சங்கரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஹெல்மெட் அணியாத காரணத்தினால்தான் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். தேவை என்றால் புகைப்படம் அனுப்பட்டுமா? என்றும் போலீசார் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி கொலை; 6 பேர் கைது..!