சென்னை: தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (ஜூலை 2) காலையில் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் மக்களைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அரங்கநாதன் சுரங்கப்பாதையின் கிழக்குப் பகுதியில், 70 அடி சாலையின் தெற்கில் உள்ள வீட்டின் உரிமையாளர், தனது வீட்டிற்காக சாலையின் நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி மேற்கொண்டிருந்தது தெரியவந்தது.
ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது வெளியேற்றப்படும் ஈரக் களிமண் கொண்ட கழிவானது, சாலை முழுவதும் பரவிக் கிடந்ததையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்தார். இதையடுத்து உடனடியாக இந்த ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, இதனை மேற்கொண்ட வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியினை மேற்கொண்டவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இந்த இடத்தினை நேரில் பார்வையிட்டார். பின்னர், செயற்பொறியாளர் புருசோத்தமன் வாயிலாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், சாலையின் நடைபாதையில் ஆழ்துளைக் கிணறு அமைத்த வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆழ்துளை கிணறு தோண்டிய போர்வெல் காண்டிராக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆழ்துளைக் கிணறு அமைக்கப் பயன்படுத்தப்பட்ட போர்வெல் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல் காரணமாக, உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டு திண்டிவனத்தில் நடந்தது. திண்டிவனம் நகராட்சியில் திமுக முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர் என்பவர், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையின் நடுவில் 300 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு தோண்டினார். இது தொடர்பாக பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்படி, நகராட்சி நிர்வாகிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அதன் பிறகு, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, போலீசார் சட்டத்திற்கு புறம்பாக போட்டுள்ள ஆழ்துளை கிணற்றை மூடும்படி, பாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன் பின்னர், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் ஆழ்துளை கிணறு ஜல்லி கொட்டி மூடப்பட்டது. இதேபோல் கடந்த 2021ஆம் ஆண்டு தேனி மாவட்டம் போடி நகராட்சியில் சாலையில் தனியாரால் போடப்பட்ட ஆழ்துளை கிணறு முடப்பட்டது.
இதையும் படிங்க: Theni News:விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமிகள்!