கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்துவருகின்றன. குறிப்பாக இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் தாமாகவே முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையேற்று பலர் பரிசோதனை செய்ய முன்வந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீண்ட நாள்களாக பெரியமேடு பகுதியிலுள்ள மசூதியில் வெளிநாட்டினர் 3 பேர் தங்கி வருவதாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் துறையினரும் சுகாதாரத்துறையினரும் மசூதிக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தாங்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 20ஆம் தேதி சென்னைக்கு தொழுகை குறித்த பயிற்சிக்காக வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் அரசு உத்தரவை மீறி கரோனா சிகிச்சைக்கு உட்படாமல் தங்கி இருந்ததாகக் கூறி அவர்கள் மீது தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பெரியமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் மாவட்ட வாரியான விபரம் வெளியீடு!