சென்னை: ஆவடி அடுத்த பட்டாபிராம் தண்டுரை பகுதியைச்சேர்ந்தவர், வெங்கடேசன் (40). கார்பென்டர் தொழில் செய்து வருகிறார். இவர், பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதில், பட்டாபிராம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் கடந்த 5ஆம் மாதம் இறந்துபோன தனது உறவினர் உடலுக்கு மாலை அணிவிக்கச்சென்ற தன்னை, தனக்குத்தொடர்பு இல்லாத, அங்கு நடைபெற்ற சண்டையைக் காரணம் காட்டி காவலர்கள் மூலம் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றார்.
உயிர் போகும் வலி: காவல் நிலையத்தில் சட்டத்துக்குப்புறம்பாக ஒரு கொலைக் குற்றவாளியைப்போல் கையிைல் விலங்கு போட்டு, சுமார் 5 மணி நேரம் காவல் நிலையத்தில் ஒரு அடிமைபோல் நடத்தியும், பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், லத்தியால் அடித்தும், மனித உரிமை மீறல் செய்தார். இதில் தனக்கு உயிர் போவது போல் வலி ஏற்பட்டது. இதனால், மிகுந்த உடல் வேதனையோடு மன வேதனையும் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீதான குற்றச்சாட்டின்மீது இரண்டு பிரிவுகளின்கீழ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விசாரணைக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட வெங்கடேசன், பட்டாபிராம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை இயக்குநர், ஆவடி காவல் ஆணையரகம், துணை ஆணையர் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கும் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட வெங்கடேஷின் வழக்கறிஞர் ஸ்ரீதரன் பாபு கூறுகையில், “பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை தவறாகப்பயன்படுத்துகிறார். எந்தவொரு தவறும் செய்யாத வெங்கடேசனிடம் மனித உரிமை மீறல் செய்துள்ளார். அதேபோல் பட்டாபிராம் காவல் நிலையத்தில் வரும் பொதுமக்கள் செருப்பு அணிந்து வரக்கூடாது என தீண்டாமையை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.
அவரது அறையில் தங்களது மேல் அலுவலர்களுக்குத்தெரியாமல் சட்டவிரோதமாக வீடியோ கேமரா வைத்து பாதிக்கப்பட்டு வரும் தனிமனித சுகந்திரத்தைப்பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். மேலும், புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் மட்டுமின்றி வழக்கறிஞர்களை தரக்குறைவாக நடத்தி ஒருமையில் பேசி வருகிறார். இதேபோல் ஜார்ஜ் லாரன்ஸ் மீது 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற அலுவலர்களால் அரசிற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, பட்டாபிராம் ஆய்வாளர் ஜார்ஜ் லாரன்ஸ் மீது அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கவில்லை என்றால் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் பார்கவுன்சில் துணையோடு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: இரண்டு நாள்கள் விசாரணைக்குப்பிறகு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்!