சென்னை: சென்னையைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கடந்த 2019ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது மட்டுமே குற்றம் சாட்டப்பட்டது. அதேநேரம் இந்த புகார் மீது முழுமையாக விசாரிக்கப்படவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இவ்வாறு தமிழ்நாடு அரசால் பிறப்பித்த உத்தரவில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.
எனவே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் புகார் அளித்த அவர்களின் சகோதரர்களின் பெயர்களை இடம் பெறச் செய்தது குறித்து அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமைச் செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2022 ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தேன்.
அந்த புகார் மனு, கடந்த ஜூலை 22ஆம் தேதி டிஜிபி மற்றும் கோவை எஸ்பிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே கடந்த ஆண்டு ஜனவரியில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு வரும் பிப்ரவரி 13 அன்று விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: 3ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த ஆசிரியர் கைது