சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை சாலை 2ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சின்னராசு (29). இவர் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகின்றார். அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
கடந்த 10 நாள்களாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் பெண் சின்னராசுவுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார்.
அந்தப் பெண் மாற்றுத் திறனாளி என்பதால் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று போனில் சின்னராசு கூறியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த சின்னராசு அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் அறைந்ததோடு, 'உன்னை திருமணம் செய்துகொள்ள மாட்டேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சின்னராசுவை கைதுசெய்த காவல் துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கிரஷர் உரிமையாளரை மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது