சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டிய எழுபது அகவையில், 'எங்கள் முதலமைச்சர் எங்கள் பெருமை' என்ற பெயரின் முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்.பி தயாநிதிமாறன், மேயர் பிரியா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், "இரவும் பகலுமாக இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உணர்ந்ததால் படப்பிடிப்பை சற்று ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளேன். ஸ்டாலினை கலைஞர் மகன் என்ற காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். எங்களுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக இருக்கும் சந்தோசம் நிறைய என்றாலும்; சவால்களையும் ஏற்று படிப்படியாக தொண்டனாக இளைஞர் அணியின் தலைவனாக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக பதவியேற்று இன்று தமிழ்நாட்டில் முதலமைச்சராக படிப்படியாக உயர்ந்தவர். இது அவரின் பொறுமையை மட்டுமல்ல திறமையையும் காட்டுகிறது.
சரித்திரத்தை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சரித்திரத்தை மாற்றி எழுதப் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு சவால் விடுவது போல் சரித்திரத்தை நாம் நினைவு கூற வேண்டும். அந்த நினைவு தான் இது. நல்ல செய்தி தபாலில் வரும், கெட்ட செய்தி தந்தியில் வரும் என்பார்கள். இதெல்லாம் நல்ல செய்தி தபால் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்'' என்றார்.
அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "திமுக உடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது சீன் பை சீன் ஆகத் தான் நகர்த்த வேண்டும். கிளைமேக்ஸை இப்போதே சொல்ல முடியாது" எனத் தெரிவித்தார். திமுக கொள்கை உடன் ஒத்துப்போகிறீர்களா என்ற கேள்விக்கு; ''ரொம்ப நாளா'' என்ற கமல்ஹாசன், ''முதலமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள்'' என்று கூறினார்.
இதையும் படிங்க:"மக்களுக்காக யாரும் பணி செய்யவில்லை; சுயசம்பாத்தியம் பன்றாங்க": தென்காசி மக்கள் ஆதங்கம்!