சென்னை: தாம்பரம் காவல் ஆணையரகம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை, காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செங்கல்பட்டை சேர்ந்த மாரியப்பன் உட்பட மூவரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஆறு கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடக்கால் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் டெஜூரி(32) என்பவரிடம் கஞ்சா வாங்கி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
எனவே டெஜூரியின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்ட காவல்துறையினர், தங்களுக்கு கஞ்சா வேண்டும் என்றும் தாம்பரம் கொண்டு வந்து தரும்படியும் தெரிவித்துள்ளனர். இதனால் மூன்று கிலோ கஞ்சாவை வைத்துக் கொண்டு தாம்பரம் சி.டி.ஓ காலனி சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த புருஷோத்தமன் டெஜூரியை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதனையடுத்து அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா மற்றும் செல்போனை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த பத்து மாதங்களாக தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து புருஷோத்தமன் டெஜூரி மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட மூன்று பேர் கைது!