சென்னை மயிலாப்பூர் காவல் துறையினருக்கு கடந்த 28ஆம் தேதி கீழ்ப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல் கிடத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் மயிலாப்பூர் தனிப்படை காவல் துறையினர் கீழ்பாக்கம் தாசபிரகாஷ் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்த நபர் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் நெற்குன்றம், வடுவை அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (33) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், ஆந்திர மாநிலத்தில் கோபால் என்பவரிடமிருந்து கஞ்சாவை பெற்று கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. மேலும் சேத்துப்பட்டு, மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி தங்கையா என்பவருக்கு கஞ்சா விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அலுவலகம் எதிரே உள்ள காந்தி சிலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த தங்கையாவையும், சசிகுமாரையும் காவல் துறையினர் கைதுசெய்து அவர்களிடமிருந்த 20 கிலோ கஞ்சா, விற்பனைக்குப் பயன்படுத்திவந்த காரை பறிமுதல்செய்தனர்.
பின்னர், கைதுசெய்யப்பட்ட சசிகுமார் அளித்த தகவலின்பேரில் அவரது தம்பியான மதுரவாயலைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (31) என்பவரைக் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடமிருந்த 85 கிலோ கஞ்சா, விற்பனைக்குப் பயன்படுத்திய நான்கு வாகனங்களைப் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: விடுதியில் தனியாக தங்கியிருப்பவர்களை குறிவைத்து மடிக்கணினி, செல்போன் திருடியவர் கைது