சென்னை, தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருவதாக பீர்கங்கரணை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், புது பெருங்களத்தூர் ஆர்.எம்.கே நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அங்கு சென்று சோதனை நடத்தியபோது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
ஆனால், பலமுறை தேடியும் வெங்கடேசன் சிக்காததால் இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரை காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சா, ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம், மூன்று அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, காவல் துறையினரின் முதல் கட்டவிசாராணையில், வெங்கடேஷ் பல வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கொலை முயற்சி, கத்தியை காட்டி செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது.
தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக முதல்முறையாக பெருங்களத்தூரிலிருந்து ஆந்திராவுக்கு மிதிவண்டியில் சென்று கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்புணர்வு: காவல்துறையில் புகார் ஏற்காததால் பெற்றோர் தற்கொலை முயற்சி!