இது குறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர், முனைவர் பழனிச்சாமி மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலிருந்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயின்ற பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்து, விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பாக கடிதம் எழுதினார்.
தற்போது அதன் தொடர்ச்சியாக வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1. 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி, தங்கள் கல்வி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு உயர் நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்குமான பத்தாம் வகுப்பு | பதினொன்றாம் வகுப்பு மாணவர்களது வருகைப் பதிவேடு விவரங்களை பூர்த்தி செய்வதற்கான மாணவர்களது முகப்புத்தாட்களை ( Top Sheet ) பள்ளி வாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களது வருகைப் பதிவேடுகளில் உள்ள விவரங்களை அரசுத் தேர்வுத் துறையால் அளிக்கப்படும் முகப்புத்தாளில் ( Top Sheet ) Part-A பகுதியினை பூர்த்தி செய்வதற்கு அட்டவணையாளர் (Tabulator ) ஒருவரும் மற்றும் Part-B பகுதியினை பூர்த்தி செய்வதற்கு சரிபார்ப்பு அலுவலர் (MVO ) ஒருவரும், கூர்ந்தாய்வு அலுவலர் ( SO - தலைமையாசிரியர் நிலை ) ஒருவரும் கொண்ட ஐந்து குழுக்களை, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம் செய்தல் வேண்டும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பிற்கு என தனித்தனி குழுக்கள் அமைக்கப்படுதல் வேண்டும். மேலும் மாணவர்களது வருகைப் பதிவேடு தொடர்பான விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றும் பணிக்கென நியமனம் செய்யப்பட்டுள்ள கணினி இயக்குபவர்களை, இப்பணிக்கு கூடுதலாக நியமனம் செய்து கொள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிக்கு பயன்படுத்துவது போல இரண்டு குழுக்கள் A - Team மற்றும் B - Team என அமைத்து வருகைப் பதிவேடுகளின் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. வருகைப் பதிவேடு விவரங்களை பதிவேற்றம் செய்தல் தொடர்பான பணியில் முதலில், மேல்நிலை முதலாம் ஆண்டு முடிக்காமல் நிலுவையில் இருப்பவர்கள் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்தல் வேண்டும், இப்பணி முடிவுற்ற பின்னரே பத்தாம் வகுப்பு மாணவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்தல் வேண்டும் .
4. சரிபார்ப்புக் குழுவினர், பள்ளி எண் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பள்ளியின் வருகைப் பதிவேட்டினையும் எடுத்து வருகைப் பதிவேட்டில் 16.03.2020 வரை பதிவு உள்ளதா என்பதனை சரிபார்க்க வேண்டும். அதன் பின்பு, ஒவ்வொரு பள்ளியின் 2019-2020ஆம் கல்வி ஆண்டிற்கான மொத்த வேலை நாள்களின் எண்ணிக்கையினையும், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பயின்ற ஒவ்வொரு மாணவரும் அக்கல்வியாண்டில் பள்ளிக்கு வருகை புரிந்த நாள்களையும் சரிபார்த்து, அவ்விவரங்களை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட Top Sheet-இல் Part-A , Part - B பூர்த்தி செய்த பின்னர், சரிபார்ப்பு அலுவலர் (MVO) மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர் ( SO ) உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும் .
5. பின்னர் Top Sheet-இன் Part - A பகுதியைப் பிரித்து, பள்ளி வாரியாக வருகைப் பதிவேட்டுடன் கட்டி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பிரிக்கப்பட்ட Part - B பகுதியினை 25 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டி, மதிப்பெண் பதிவேற்றம் செய்திட வேண்டும். அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் மாணவர்களின் வருகைப் பதிவிற்கான விவரங்களை Part -B- Top Sheetல் உள்ளவாறு பதிவேற்றம் செய்த பின்பு, Part - B பகுதியினை மாவட்டக் கல்வி அலுவலர் தமது வசம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
6. 30.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில், Part-B-ல் உள்ள வருகைப் பதிவேடு விவரங்களை பதிவேற்றம் செய்தல் வேண்டும். மேலும் மேல்நிலை முதலாம் ஆண்டு முடிக்காமல் நிலுவையில் இருக்கும் மாணவர்களது விவரத்தினை முதலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
7. மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும், மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும் சேர்த்து மொத்தம் 100%-திற்கு மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
8. மேற்கண்ட பணிகள் யாவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் என்பதால், கவனமாக செயல்பட வேண்டும் எனவும், மேற்கண்ட பணிகளில் எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் உன்னிப்பாக செயல்பட வேண்டும் எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
9. மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் இம்முகாம்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு நாளும் தவறாது பார்வையிட்டு, முகாம் செம்மையாக நடைபெறுகிறதா என்பதனை உறுதி செய்து, அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: ’ஆன்லைனில் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ தயாராகவில்லை’