தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தாக்கலுக்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இன்னமும் ரத்து செய்யப்படவில்லை” என விமர்சித்தார்.
இதனையடுத்து திமுக - அதிமுக எம்.எல்.ஏக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “ வாணியம்பாடியை சேர்ந்த வசீம் கஞ்சா விற்பனை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததால் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டுள்ளார். சட்டப்பேரவை நிகழ்ச்சி தொடங்கியவுடன் அவசர முக்கியத்துவம் இரண்டு விஷயங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்
கொலை செய்தவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருடைய குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என அரசின் கவனதிற்கு கொண்டு வந்தேன்
திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலை நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார், ஆனால் ரத்து செய்யவில்லை தெளிவான முடிவையும் தெரிவிக்கவில்லை.
ஜூன் மாதம் ஆளுநர் உரையின்போது நான் கேள்வி எழுப்பியபோதும் முதலமைச்சர் மழுப்பலான பதில் அளித்தார். இந்த அரசின் தெளிவான அறிவிப்பு இல்லாமல் குழப்பமான நிலையில் நேற்று தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது. நாம்தான் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முழு பொறுப்பு திமுக அரசுதான்.
நீட் தேர்வு நடத்த வேண்டுமென்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அதனை எதிர்த்து ஏதாவது செய்ய முடியுமா. ஆனால், வேண்டுமென்றே பெற்றோரையும், மாணவர்களையும் திமுக அரசு ஏமாற்றுகிறது.
நாங்கள் நீட்டை ரத்து செய்தபோது அது அயோக்கியத்தனம் என ராசா கூறினார். இப்போது அவர்கள் தீர்மானம் கொண்டு வருவதை என்ன சொல்வது. மக்களுக்கு நன்மை பயக்கும் அரசின் முடிவுகளை அதிமுக ஆதரிக்கும்” என்றார்.