சென்னை: சென்னையில் கனமழை பெய்யும் காலங்களில் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிள் நீர் மட்டம் நிரம்பி வரும்போது செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளிலிருந்து உபரி நீரை பொதுப்பணித்துறை வெளியேற்றுகிறது. மேலும் சென்னை மாநகராட்சியின் தாகம் தீர்க்கும் ஐந்து பெரிய ஏரிகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. இந்த ஐந்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்த்தேக்க அளவை 7,907 மில்லியன் கன அடியாக குறைத்துள்ளனர். இது ஒரு புறமிருக்க, சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை பெய்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை நினைவு கொள்ளலாம்.
எனவே நாம் ஏரிகளில் உள்ள நீரை வைத்து மட்டுமே குடிநீர் விநியோகம் செய்கிறோம். சென்னையில் தாழ்வான பகுதிகளிலும், தெருக்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் மற்றும் பிரதான சாலைகளில் சூழ்ந்துள்ள மழைநீர் வெள்ள நீரை ஏன் குடிநீராக மாற்றக்கூடாது என்ற கேள்வி எழுகிறது.
நீரியல் வல்லுனர்களும் ஒரு சில ஆலோசனைகளை குறிப்பாக மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசுக்கு வழங்கியுள்ளது. எனினும் மழை நீர் சேகரிப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வு சென்னைவாசிகளிடம் தற்போது இல்லை என முன்னாள் பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளர் அ. வீரப்பன் கூறுகிறார்.
"மழை நீர் சேகரிப்பு என்பது ஒரு பெரிய அளவிலேயே நமக்கு பயன் பெறாது. அதற்கு காரணம் என்னவென்றால் சென்னை மாநகரில் 85 விழுக்காடு வீடுகள் மற்றும் கட்டடங்களாகவும் மீதமுள்ள 15 விழுக்காடுதான் நிலப்பகுதியாகவும் இருக்கிறது.
எனவே வரக்கூடிய மழைநீர் உபரி நீரை மிகுதியாக பிடிக்க முடியாது", என தெரிவித்தார். மேலும் சாலைகளில் இருக்கக்கூடிய மழைநீரை சேமித்து வைக்க ஆலோசனை வழங்கினார். "ஒரு பத்து அடி நீளம், ஐந்து அடி அகலம், பத்து அடி ஆழத்திற்கு ஒரு குழி தோண்ட வேண்டும். இதனை வடிகட்டி படுக்கை (filter bed) என்று கூறுவோம்.
இதில் மேலே மணல், அதற்கடுத்து சிமெண்ட், சிறிய ஜல்லி, பெரிய ஜல்லியை போட்டு அதற்கு கீழே துளையிட்ட (HDPE) பிவிசி குழாயை நுழைத்து எங்கு மணல் உள்ளதோ (sand aquifer) அதுவரை கொண்டு போக வேண்டும்", என தெரிவித்த அவர் இந்த முறையை பின்பற்றினால் சாலைகளில் தேங்கியுள்ள நீர் இந்த பிவிசி குழாயின் மூலம் சென்று ஆழ்துளை மற்றும் திறந்த வெளி கிணறுகள் நிரம்பும் என்றார். எனவே இந்த உபரிநீரை சென்னை குடிநீர் வாரியம் சுத்திகரித்து செய்து சென்னைவாசிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படலாம் எனவும் கூறினார்.
இதற்கு பதிலாக சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை முறையாக ஆழப்படுத்தினால் சென்னைக்கு கூடுதலாக 15 டி.எம்.சி நீர் கிடைக்கும். எனவே இதனையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார். இது குறித்து சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் முரளிதரன் நம்மிடம் கூறுகையில், "சென்னை மாநகரத்தில் கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இந்த வடிகட்டி படுக்கை (filter bed) மூலம் மழை உபரி நீர் சேகரிக்கப்படுகிறது", என தெரிவித்தார்.
மேலும் அவர் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஐந்து முக்கிய ஏரிகளை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். சென்னைக்குப் பயன்படும் குடிநீர் தேக்கங்களின் மொத்த கொள்ளளவு என்பது வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. ஆனால் அவற்றை ஆழப்படுத்தும் வேலையை எந்த ஒரு அரசும் செய்யவில்லை. சென்னை மாநகரத்திலே நீர்சேமிப்புச் சாத்தியங்கள் நிறைய உண்டு. ஆக்கிரமிப்புகளும் குப்பைகளும் நிறைந்த ஆலயக் குளங்கள், விளிம்புநிலை ஏரிகளை தூர்வாரி சீர்ப்படுத்தலாம் என்பது நீரியல் நிபுணர்களின் அழுத்தமான கருத்தாகும்.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறினால்....ரயில்வே துறைக்கு எச்சரிக்கை