கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்திவரும் நிலையில், சீனாவில் மட்டும் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கொரோனா வைரஸானது ஜப்பான், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட உலகின் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
இதனைத் தடுக்கவும், பாதிப்புகளிலிருந்து தப்பவும் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஒருவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் எழும்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்கள் விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் என்றால் என்ன, நோய்க்கான அறிகுறிகள், நோய் பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும், கை கழுவும் கிருமி நாசினி கொண்டு, கை கழுவும் முறை குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள், காவல் துறையினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.