சென்னை அடுத்த வண்டலூரில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு கால்டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பெருங்களத்தூர் அருகே காவல் துறை சோதனை சாவடியின் அருகில் நிழலில் காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துள்ளார்.
அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் மணிகண்டனை அழைத்து, சோதனை சாவடி அருகிலேயே காரை நிறுத்தி எப்படி ஓய்வெடுக்கலாம் என மிரட்டியதோடு, அடித்தும் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கால்டாக்ஸி ஓட்டுநர்கள் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் கார்களை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் மணிகண்டனை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் உள்ள அனைத்து ஓட்டுநர்களையும் திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்த போவதாகவும் ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.