மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் உள்ள பெரியார் பிரிவு பாசன கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து கொட்டாம்பட்டி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆண் சடலம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகநாதன் என்பதும் அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக சென்னையில் கால் டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் என்பதும் அவர் காணாமல் போனதாக அசோக் நகர் காவல் நிலையத்தில் கால் டாக்சி உரிமையாளர் சுந்தர் சிங் புகார் அளித்திருந்ததும் தெரியவந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் உட்பட ஐந்து பேர் நாகநாதன் ஓட்டிய இனோவா காரை மதுரை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்காக பதிவு செய்து அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த 8ஆம் தேதி இரவு ஓட்டுநர் நாகநாதன், சுந்தர் சிங்கை அழைத்து 9ஆம் தேதி மதியத்திற்குள் சென்னை திரும்பி விடுவதாக தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர் 9ஆம் தேதி அவர் சென்னை திரும்பாததால் சுந்தர் சிங் நாகநாதனை தொடர்புகொண்டுள்ளார். அப்போது அவரது அலைபேசி அணைக்கப்பட்டிருந்தை அறிந்து உடனடியாக காவல்துறையிடம் சுந்தர் சிங் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான் மதுரையில் நாகநாதன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஓட்டி வந்த வாகனம் கிடைக்கவில்லை என்பதால் சுற்றுலா சென்றவர்கள்தான் நாகநாதனை கொலைசெய்துவிட்டு காரை கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த ஐந்து பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாகநாதனின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் இருப்பதால் உடற்கூறாய்வு முடிவு வந்த பிறகே அவரது மரணம் தொடர்பான தகவல்கள் தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:செம்புக்காக ஆசைப்பட்டு போலீசாரின் 44 வாக்கி டாக்கிகளை திருடிய பலே ஆசாமி