சென்னை: பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருமதா. கணவர் செந்திலுடன் சென்னை பாரிஸ் பகுதிக்குச் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு இன்று (பிப்.2) அதிகாலை 5 மணிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு 5.10 மணிக்கு பெரும்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு பாரிஸ் செல்ல வேண்டிய 102B என்ற பேருந்தினை 5.30 மணி ஆகியும் எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த தம்பதியினர் மற்றும் சகப்பயணிகள் ஓட்டுநரிடம் கேட்டபோது 'காத்திருங்கள் இல்லையேல், இறங்கிச் செல்லுங்கள்' எனக் கூறி ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஓட்டுநருக்கும் தம்பதியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதிகார தொனியில் பேசும் ஊழியர்கள்
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஓட்டுநர் இருவரையும் தாக்கியதில் முருமதா மயங்கி கீழே விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சகப்பயணிகள் பேருந்தின் முன்பும், பணிமனையின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பணிமனை அலுவலர்களிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்துப் பயணிகள் கூறும்போது, "பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் தொடர்ந்து பயணிகளை அலைக்கழிக்கின்றனர். பேருந்தை தாமதமாக எடுக்கின்றனர்.
பயணிகளிடையே அதிகார தொனியில் பேசி வருகின்றனர்" எனக் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: கையூட்டு பெறுவதாகத் தொடரப்பட்ட வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி!