கரோனா தொற்று தமிழ்நாட்டில் அதிகளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனால் பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்துகள் 100 விழுக்காடு இயங்கவில்லை. முன்னதாக கடந்தாண்டு மார்ச் 25 ஆம் தேதியிலிருந்து சுமார் ஒரு வருடம் பேருந்துகள் இயங்காமல் இருந்தது. இதனால் மிகப் பெரியளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பேருந்துகளின் பராமரிப்பு பணியில் ஈடுபடுவது, தங்களிடம் பணியாற்றிய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகள் இருப்பதாக அவர்கள் கூறிகின்றனர்.
இதனால், பேருந்துகள் ஓடாத காலகட்டத்தில் பேருந்து அலுவலகத்திற்கான வாடகை, பேருந்து நிறுத்துவதற்கான கட்டணம் ஆகியவற்றை வசூலிப்பதை தமிழ்நாடு அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனை வலியுறுத்தி அந்த அமைப்பு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.
மேலும், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் சாலை வரியை 50 விழுக்காட்டிற்கு குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுச்சேரியில் பேருந்துகள் இயங்காத காலத்துக்கு ஸ்டாப்பேஜ் விண்ணப்பம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பேருந்துகளுக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.