சென்னை மாநகர பேருந்தில் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தட்டிக் கேட்ட பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக இரண்டு மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாநகர பேருந்து கோயம்பேட்டில் இருந்து செங்குன்றம் நோக்கி மாலை புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் சுயாட்சி என்பவர் இயக்கிய நிலையில், கோயம்பேட்டில் மது போதையில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பேருந்தில் ஏறியதாக கூறப்படுகிறது. மேலும் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் விதமாக தாளம் போட்டு ஆட்டம் பாட்டத்தில் இருவரும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மேலும் பேருந்தானது திருமங்கலம் 100 அடி சாலை பேருந்து நிறுத்தத்திற்குச் சென்றபோது ஓட்டுநர் சுயாட்சி, நடத்துனர் சிவாவிடம் பேருந்தில் மாணவர்கள் சத்தம் போட்டு தகராறு செய்து கொண்டிருக்கிறார்கள், நீங்கள் பின்னாடி நின்று என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு உள்ளார். அப்போது நடத்துனர் சிவா மாணவர்களை கண்டித்தார்.
இதையும் படிங்க: சுந்தரா டிராவல்ஸை மிஞ்சிய அரசு பேருந்து.. புகையால் சூழ்ந்த சாலை!
இதனால் பேருந்தில் பயணித்த ஆறு மாணவர்களும் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குவாதம் அதிகரித்த நிலையில் குடிபோதையில் இருந்த கல்லூரி மாணவர்கள் ஓட்டுநர் சுயாட்சியை தாக்கியதாக கூறப்படுகிறது. ஓட்டுநரை தாக்கி விட்டு தப்ப முயன்ற ஆறு மாணவர்களில் இரண்டு மாணவர்களை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பிடித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், போலீசார் விசாரணையில் மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்தது. மாணவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த ஓட்டுநர் சுயாட்சி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தப்பி ஓடிய மற்ற மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம்: புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் - டாக்டர். கிருஷ்ணசாமி!