சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷால் சிங் (24). இவர் புதுச்சேரியில் தங்கி இருந்து, தனியார் கல்லூரியில் எம்பிஏ இறுதி ஆண்டு படித்து வருகிறார். விஷால் சிங்கின் அண்ணன், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், தனது அண்ணனைப் பார்ப்பதற்கு, மும்பை செல்வதற்காக விஷால் சிங் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் மும்பை செல்ல பயணச் சீட்டை எடுத்த விஷால் சிங், போர்டிங் பாஸ் வாங்கி விட்டு, விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்று உள்ளார். இதனிடையே, பாதுகாப்பு சோதனை பகுதியில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விஷால் சிங்கின் உடைமைகளை வழக்கம்போல் ஸ்கேன் செய்து பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது விஷால் சிங் கொண்டு வந்திருந்த கைப்பையில் இருந்து வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. எனவே, சோதனையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த கைப்பையை மட்டும் தனியே எடுத்து வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், விஷால் சிங்கை அழைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையின்போது, சிக்கிய கைப்பையில் குண்டு எதுவும் இல்லை என விஷால் சிங் கூறி உள்ளார். ஆனாலும், பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பையை சோதித்து பார்த்து உள்ளனர். அப்போது, அந்த கைப்பையினுள் எஸ்எல்ஆர் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் துப்பாக்கி குண்டு ஒன்று லைவாக இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர்.
இதனையடுத்து, பிடிபட்ட மாணவர் விஷால் சிங் மேற்கொள்ள இருந்த மும்பை பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர். அதன் பிறகு விஷால் சிங்கையும், துப்பாக்கி குண்டையும் சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, விஷால் சிங்கிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில், தனது தந்தை ஸ்ரீ நகரில் சிஆர்பிஎப் உதவி ஆய்வாளராக பணியில் இருப்பதாக விஷால் சிங் கூறி உள்ளார். அது மட்டுமல்லாமல், சிக்கிய கைப்பை தனது தந்தை உடையதுதான் என்றும், அவர் பயன்படுத்தும் துப்பாக்கி குண்டு, இந்தப் பையில் இருந்திருக்கிறது என்றும், அதனையே நான் கவனிக்காமல் எடுத்து வந்து விட்டேன் என்றும் விஷால் சிங் கூறி உள்ளார்.
ஆனாலும், துப்பாக்கிக் குண்டை பறிமுதல் செய்த காவல் துறையினர், ஸ்ரீ நகரில் உள்ள மாணவர் விஷால் சிங்கின் தந்தைக்கும் தகவல் அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், புதுச்சேரியில் விஷால் சிங் தங்கி இருந்த இடம், அவர் படித்த கல்லூரி ஆகியவற்றிலும் விஷால் சிங்கின் பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்வதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் கொடிகட்டி பறக்கும் ஹவாலா பிஸ்னஸ்.. ரூ.3.37 கோடி பணம் சிக்கியது எப்படி?