சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விடாமல் அதி கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னையில் பல்வேறு சாலைகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரி பிரதான சாலையான 5 பர்லாங் சாலையில் தனியார் கேஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே கேஸ் நிலையத்திற்குச் சொந்தமான அலுவலக கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கேஸ் நிலையத்தை ஒட்டியவாறு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காகப் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு பேஸ்மெண்ட் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக கேஸ் நிலையத்தை ஒட்டியவாறு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு கேஸ் நிலையத்திற்குச் சொந்தமான அலுவலக கட்டிடம் அந்த 40 அடி பள்ளத்தில் விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியிலிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த விபத்தில் தனியார் கேஸ் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் உட்பட ஐந்து பேர் அலுவலக கட்டிடத்திற்குள் இருந்தவாறே அந்த 40 அடி பள்ளத்திற்குள் விழுந்து உள்ளே மாட்டிக்கொண்டனர். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்திற்குள் சிக்கியிருந்த மூன்று பேரை மீட்டு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் தொடர் கனமழையால் சாலையில் விழுந்த பழமை வாய்ந்த மரம்!
ஆனால் மற்ற இருவரும் அந்த பள்ளத்திற்குள்ளே சிக்கிக் கொண்டதால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் ரப்பர் படகு உள்ளிட்ட உபகரணங்களுடன் வந்திருந்தனர். இருப்பினும் தொடர்ந்து அந்த பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு மழைநீர் அனைத்தும் பள்ளத்திற்குள் சென்று நிரம்பி வருவதால் எவ்வாறு அந்த பள்ளத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபடலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை தெற்கு கூடுதல் ஆணையர், போக்குவரத்து கூடுதல் ஆணையர், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, இருவரையும் எப்படி மீட்கலாம் என்பது குறித்துத் திட்டமிட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் பெருமளவு மழை நீர் தேங்கி இருந்ததால் அந்த தண்ணீரும் விபத்துக்குள்ளான பள்ளத்தில் தேங்கி வருகிறது. இதே நிலை நீடித்தால் அந்த விபத்துக்குள்ளான பள்ளம் விரைவாக நிரம்பிவிடும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், தொடர்ந்து சென்னையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் விபத்துக்குள்ளான பள்ளத்தின் பக்கவாட்டு பகுதிகளில் மண் சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மீட்புப் பணியில் ஈடுபட முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
தொடர்ந்து தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பள்ளத்தில் சிக்கி உள்ள இருவரை மீட்பதற்கான திட்டமிடுதலைச் செய்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், தொடர்ந்து இரண்டு மணி நேரமாக இந்த மீட்புப் பணிகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சென்னையை புரட்டிப்போடும் மிக்ஜாம் புயல்; இன்று இரவு வரை கனமழை தொடரும் என எச்சரிக்கை!