உலகப் புகழ்பெற்ற புத்தகயா பிகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இந்த இடத்துக்குப் புத்தமதத் தலைவர் தலாய்லாமா, பிகார் ஆளுநர் ஆகியோர் வருகைதரும்போது குண்டு வெடிப்புக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அங்கு இரு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இது தொடர்பாக வங்கதேசத்தில் செயல்பட்டுவரும் ஜமாஅத்-உல்-முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நசீர் ஷேக், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டது.
அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் குண்டு தயாரிக்கும் பயிற்சியை ஜமாஅத்-உல்-முஜாஹிதீன் அமைப்பு அளித்துள்ளதாகவும் தமிழ்நாட்டில் ஜமாஅத்-உல்-முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பயங்கரவாதி நசீர் ஷேக் அளித்த தகவலின் பெயரில் நீலாங்கரையில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்துகொண்டு தலைமறைவாக இருந்த ஷேக் அப்துல்லாவை தேசிய புலனாய்வு முகமையும் சென்னை மாநகர காவல்துறையினரும் கைது செய்தனர். இதையடுத்து, அவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
விசாரணைக்குப் பின் அவர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் அவரை ஹைதராபாத்திற்கும் பிகாருக்கும் அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக 2013ஆம் ஆண்டு புத்தகயாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டுப் பயணிகள் உள்பட பலரும் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.