சென்னை, கிண்டி வெங்கடாபுரம் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வேதநாயகம்(70). ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளரான இவருக்கு செல்வராஜ், நேசராஜ் (35), பாக்கியராஜ் (32) என மூன்று மகன்கள் உள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், அனைவரும் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் (பிப்.03) நேசராஜ் தனது தம்பி பாக்கியராஜ் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாக்கியராஜ் நேசராஜிடம் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதில், பாக்கியராஜ் அடித்ததில் நேசராஜ் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நேசராஜ் சிகிச்சைப் பலனின்றி நேற்று (பிப்.04) உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், நேசராஜ் உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரது சகோதரர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருமகனை வெட்டிக்கொலை செய்த மாமனார் கைது!