சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து சொல்வதற்கு, அம்மா பேரவை செயலாளர் சார்பில் மாவட்ட செயலாளர்களுக்கு செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திமுக 10 இடங்களில் கூட வெற்றி பெறாது: அப்போது அதிமுக அரசின் சாதனைகள் புத்தகமாக வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ’இன்றைய நிலையில், தேர்தல் நடந்தால் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என்று மத்திய, மாநில உளவுப்பிரிவு சொல்கிறது. திமுக அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்கும் நமது வேகம் குறையக்கூடாது. செவிடர்களாக திமுக அரசு இருக்கிறது’ என்றும் பேசினார்.
தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, திமுக அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகவும், எப்போது ஆட்சி முடியும் என யோசிக்கத்தொடங்கிவிட்டனர் எனவும் கூறினார். பொய்யான செய்திகளால் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
அனைத்துத் துறைகளிலும் லஞ்சம்: அனைத்துத் துறைகளிலும் லஞ்சமாக பெறக்கூடிய பணம் ஒருவழிப் பாதை போலவும், தேசிய நெடுஞ்சாலை போலவும், கருணாநிதி குடும்பத்திற்கு நேரடியாக செல்கிறது எனப் பேசிய பழனிசாமி, ஊழல் செய்வதில் முதன்மையானவர் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என குற்றஞ்சாட்டினார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய பல முறை வலியுறுத்தியும் , திமுக அரசு செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் உள்ளது. எனவே வீடு வீடாக சென்று நாம் திமுக அரசின் அவலங்களை துண்டு பிரசுரங்களாக வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
பயிற்சி முகாமில், அதிமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவது, திமுக நடத்தும் திராவிட மாடல் ஆட்சியின் உண்மை நிலை என்ன? அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமையைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பது, டிஜிட்டல் பரப்புரையின் அவசியத்தை அறிதல் உள்ளிட்ட தலைப்புகளில் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு அதிமுக மூத்த தலைவர்கள் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.
நிகழ்வில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பென்ஜமின், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டப் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை - ஓபிஎஸ் கண்டனம்!