சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பிரதான சாலையில் அட்டை பெட்டி வாங்கி விற்பனை செய்யும் கடையை கணேசன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு (ஜன.25) கடையின் முன் நின்றிருந்த லாரியின் அருகில் போதையில் வந்த பல்லாவரம் போக்குவரத்து ஆர்எஸ்ஐ வில்சன், தான் போலீஸ் எனக் கூறி 500 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
அப்போது, லாரியின் ஓட்டுநர் பணம் தர மறுத்ததால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அபராதம் விதிக்கும் கருவியை எடுத்து வந்து, நோ பார்க்கிங்கில் லாரி இருப்பதாகக் கூறி ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்ததோடு, தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்த ஓட்டுநர், ‘நீங்கள் மது போதையில் உள்ளீர்களா’ எனக் கேட்டதற்கு, தான் குடிக்கவில்லை எனக் கூறி மழுப்பலாக பேசிவிட்டு, அங்கிருந்து வண்டியை எடுத்துச்சென்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து, சங்கர் நகர் காவல் நிலையத்திற்குச் சென்ற கணேசன், நடந்தவற்றைக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரிப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போக்குவரத்து ஆர்எஸ்ஐ வில்சன் மீது உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், அவர் தற்போது ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை: உருக்கமான வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!