சென்னை: சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அலுவல்கள் தொடர்பாக வந்து செல்கின்றனர். பெண்கள், முதியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்கவும், தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளை சந்திக்கவும் வருகின்றனர்.
அதேபோல் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தலைமைச் செயலகத்திற்கு தங்கு தடையின்றி வந்து செல்லும் வகையில் மாற்று திறனாளிகளுக்கான பிரத்யோகமான கான்கிரீட் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திற்கு வரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள், அங்குள்ள துறைகளை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி வழிகாட்டு பலகை வைக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் இந்த ப்ரெய்லி முறையிலான வழிகாட்டு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இதன் மூலம் எங்கு செல்ல வேண்டும்? எப்படி வெளியே செல்ல வேண்டும்? உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த பிரெய்லி வழிகாட்டு பலகை தங்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாக தலைமைச் செயலகம் வந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தெரிவித்தார். இது ஆங்கிலத்தில் இருப்பதால் அனைவருக்கும் உதவியாக இருக்காது என்றும், தமிழில் வைத்தால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிகள் 85% நிறைவேற்றம்: அமைச்சர் செந்தில் பாலாஜி