TN Firing Range Case: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நார்த்தாமலை சரகத்தில் அமைந்துள்ள துப்பாக்கிச் சுடும் பயிற்சித்தளத்தில் கடந்த 30ஆம் தேதி துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியின்போது, நார்த்தாமலைக்கு அருகில் உள்ள கொத்தமங்கலப்பட்டி கிராமத்தில் வசித்துவந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அச்சிறுவனின் தலையின் இடதுபக்கத்தில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. குண்டு பாய்ந்த அச்சிறுவன் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, மருத்துவர்களால் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், இன்று (ஜனவரி 3) மாலை அச்சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இத்துயரச் சம்பவத்தை அறிந்த மு.க. ஸ்டாலின் உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்திற்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது என்றும், விசாரணையின் முடிவில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பு செய்தால் குண்டர் சட்டம்; ஜிஎஸ்டி கணக்கு ரத்து - அமைச்சர் மூர்த்தி